வகுப்பறைக்கு வண்ண நிறங்களால் பெயிண்டு அடித்து அசத்திய 10-ம் வகுப்பு மாணவர்கள்


வகுப்பறைக்கு வண்ண நிறங்களால் பெயிண்டு அடித்து அசத்திய 10-ம் வகுப்பு மாணவர்கள்
x
தினத்தந்தி 4 May 2022 11:28 PM IST (Updated: 4 May 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே 10-ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த வகுப்பறைக்கு அழகிய வண்ணத்தில் பெயிண்டு அடித்து புதுப்பொலிவு பெற செய்தது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே 10-ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த வகுப்பறைக்கு அழகிய வண்ணத்தில் பெயிண்டு அடித்து புதுப்பொலிவு பெற செய்தது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.


திருப்பத்தூர் அருகே அங்கநாதவலசையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 248 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 10-ம் வகுப்பில் மட்டும் 54 மாணவ- மாணவிகள் உள்ளனர். 

இவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அதன்பின் அவர்கள் மேல்நிலை கல்விக்கு வேறுபள்ளியில் சேர உள்ளனர்.

புதுப்பிக்க ஏற்பாடு

இந்த நிலையில் 10-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும், வகுப்பு ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் சிறிது, சிறிதாக பணத்தை சேர்த்து, தாங்கள் படித்த வகுப்பறையை அழகிய வர்ணத்துடன் பெயிண்டு அடித்து புதுப்பிக்க ஏற்பாடு செய்தனர். 

அதன்படி பெயிண்டர்கள் மூலம் வகுப்பறைக்கு வண்ண நிறங்களால் பெயிண்டு அடித்தும், மின்விளக்குகள், மின்விசிறி ஆகியவற்றை சரி செய்தும் தாங்கள் கற்கும் கல்வி கோவிலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செயல்பட்டனர். 

மேலும் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

வாழ்த்து

10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் இச்செயலை பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைக்கவும், மாணவர்களிடம் நல்ல சிந்தனைகளை உருவாக்கினால் அவர்களிடம் சமூக சிந்தனை வளரும் எனவும் இவர்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைய அடைவர் எனவும் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனமுவந்து வாழ்த்தினர்.

Next Story