கோவில் திருவிழாக்களையொட்டி பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
கோவில் திருவிழாக்களையொட்டி பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்தது.
பரமத்திவேலூர்:
பூக்கள் ஏலம்
பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து பரமத்திவேலூரில் செயல்படும் தினசரி பூக்கள் ஏல சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
பரமத்தி, வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாலப்பட்டி மற்றும் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.140-க்கும், முல்லை கிலோ ரூ.400-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.150-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் ஏலம் போனது.
விலை உயர்வு
இந்தநிலையில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பல்வேறு கோவில்களில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் பூக்கள் விற்பனை அதிகரித்ததுடன், அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் சந்தையில் குண்டு மல்லி கிலோ ரூ.650-க்கும், சம்பங்கி கிலோ ரூ.90-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.140-முல்லை கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.700-க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் பூக்கள் விலை அதிகரித்துள்ளதால் அவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story