வெங்கரை பேரூராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்வு
வெங்கரை பேரூராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி நிலைக்குழு உறுப்பினர் மற்றும் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரவீந்தர் முன்னிலை வகித்தார். இதில் மொத்தம் உள்ள 15 கவுன்சிலர்களில், தி.மு.க.வை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க.வை சேர்ந்த 8 கவுன்சிலர்களே கலந்து கொண்டனர். இதையடுத்து நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ராணி, தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் நிலைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு அ.தி.மு.க-வை சேர்ந்த 11-வது வார்டு கவுன்சிலர் வனிதா, 14-வது வார்டு கவுன்சிலர் மாயவன், 8-வது வார்டு கவுன்சிலர் ஜெயசித்ரா, 12-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் வனிதா, மாயவன், ஜெயசித்ரா, தனலட்சுமி ஆகியோர் மேல் முறையீடு குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story