பட்டறையில் வேலை செய்தபோது 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி தொழிலாளி சாவு


பட்டறையில் வேலை செய்தபோது 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 4 May 2022 11:32 PM IST (Updated: 4 May 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி தொழிலாளி பலியானார்.

எலச்சிபாளையம்:
தொழிலாளி
திருச்செங்கோடு ஆம்பூர் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 48). இவர் பாலமடை பகுதியில் உள்ள லாரி பாடி பில்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சசிகலா. இந்த தம்பதிக்கு விக்னேஷ் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர்.
சண்முகசுந்தரம் நேற்று வழக்கம் போல் பட்டறையில், சக தொழிலாளர்களுடன் இணைந்து டிங்கரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிரெதிரே 2 லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. சண்முகசுந்தரம் மற்றும் தொழிலாளர்கள் ஒரு லாரியின் முன் பகுதியில் நின்று கொண்டு வேலை செய்தனர்.
லாரிகளுக்கிடையே சிக்கி பலி
அப்போது எதிரே இருந்த மற்றொரு லாரியை டிரைவர் ஸ்டார்ட் செய்தார். பிரேக் பிடிக்காததால் அந்த லாரி முன் நோக்கி நகர்ந்தது. இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அலறியடித்த படி அங்கிருந்து ஓடினர். ஆனால் சண்முகசுந்தரத்தால் அங்கிருந்து தப்பி செல்ல முடியவில்லை. 
இதனால் லாரி அவர் மீது மோதியது. இதில் 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, லாரிகளுக்கிடையே சிக்கி பலியான சண்முகசுந்தரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருச்செங்கோட்டில் பட்டறையில் வேலை செய்தபோது, 2 லாரிகளுக்கிடையே சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story