பேரிகை அருகே ஒரே இடத்தில் 65 நடுகற்கள் கண்டெடுப்பு
பேரிகை அருகே ஒரே இடத்தில் 65 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
ஓசூர்:
பேரிகை அருகே ஒரே இடத்தில் 65 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
நடுகற்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகைக்கு அருகில் உள்ள சிங்கிரிப்பள்ளி கிராமத்தில், தமிழகத்திலேயே ஒரே இடத்தில் 65 நடுகற்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நடுகல் தொகுப்பை, அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் ஆர்வலர் இளையராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து, ஆய்வு மையத்தின் தலைவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் நடுகற்களின் பூமி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. தமிழகத்திலேயே அதிகமான நடுகற்கள் இருப்பது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள 10 இடங்களில் குவியல் குவியலாக நடுகற்கள் உள்ளன.
சித்தலிங்கேஸ்வரர் கோவில்
இதுவரை தமிழகத்தில் தளிக்கு அருகே உளள நாகொண்டபாளையத்தில் 48 நடுகற்கள் கண்டறியப்பட்டு வந்தது. தற்போது சிங்கிரிப்பள்ளியில் ஒரே இடத்தில் 65 நடுகற்கள் தொகுப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. இந்த கிராமத்தில், குறும்பர் இன மக்கள் வழிபடும் சித்தய்யா தேவரு என்றும், சித்தலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் உட்பகுதியில் தான் இந்த 65 நடுகற்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் நடுகற்கள் அனைத்துமே குறும்பர் இன மக்கள் வழிபடும் நடுகற்கள் தான். இவை அனைத்தும், 14-ம் நூற்றாண்டு தொடங்கி 17-ம் நூற்றாண்டு வரையிலான தொகுப்புகள் ஆகும். சிங்கிரிப்பள்ளியில் மற்றொரு இடத்தில் தொட்டய்யா என்ற கோவிலில் 5 நடுகற்கள் உள்ளன. நடுகற்கள் அனைத்தும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story