பென்னாகரத்தில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


பென்னாகரத்தில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2022 11:33 PM IST (Updated: 4 May 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரத்தில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.

பென்னாகரம்:
பென்னாகரத்தில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கள்ளக்காதல்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சங்கீதா (வயது 20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி 2 பேரும் திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். 
பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் சின்னபையன் (20). இவரும் திருப்பூரில் தங்கி கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதாவுக்கும், சின்னபையனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சதீஷ்குமாருக்கு தெரியவந்தது. 
திடீர் மாயம்
இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கீதாவை அவரது குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி சங்கீதாவும், சின்னபையனும் திடீரென மாயமாகினர். இதனால் குடும்பத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 
இதுகுறித்து சங்கீதாவின் கணவர் சதீஷ்குமார் கடந்த 3-ந்தேதி பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சங்கீதா பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு வருவதாக உறவினர் ஆறுமுகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். 
தற்கொலை
அதன்படி, நேற்று காலை பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் 2 பேரும் வந்தனர். அப்போது போலீஸ் நிலையம் முன்பு சின்னபையன் திடீரென மயங்கி  விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சங்கீதாவிடம் விசாரித்த போது 2 பேரும் விஷம் குடித்து விட்டு வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி 2 பேரையும் உறவினர்கள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் இறந்தனர். 
இது தொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story