பூசாரிகளுக்கு மரியாதை செலுத்திய முஸ்லிம் குடும்பத்தினர்
கம்பத்தில் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து வந்த பூசாரிகளுக்கு முஸ்லிம் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர்.
கம்பம்:
கம்பத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் சர்வ அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆயிரம் கண் பானைகள் ஏந்தியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். விழாவையொட்டி கோவில் பூசாரிகள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி கோவில் பூசாரிகள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது சின்னமலு கர்ணன் தெருவில் உள்ள முஸ்லிம்கள் வீட்டின் முன்பகுதிக்கு பூசாரிகள் மட்டும் சென்றனர். அவர்களுக்கு முஸ்லிம்கள் மரியாதை செலுத்தினர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து கோவில் பூசாரி ஒருவரிடம் கேட்ட போது திருவிழாவையொட்டி கோவில் பூசாரிகள் அக்னி சட்டி எடுத்து பல்வேறு சமுதாய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வரும்போது பூசாரிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். அதே போல் முஸ்லிம் நாட்டாண்மை குடும்பத்தை சேர்ந்த வம்சாவழியினர் பூசாரிகளை வரவேற்று மரியாதை செலுத்துவது வழக்கம். மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக பல தலை முறைகளாக மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் பூசாரிகளுக்கு மாலை அணிவித்து அவர்கள் மரியாதை செலுத்தினர் என்றார்.
Related Tags :
Next Story