சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு


சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 May 2022 11:52 PM IST (Updated: 4 May 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

தேனி: 


கலெக்டர் ஆய்வு
தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வருகிற 10-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி நடக்கிறது. இந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடு மற்றும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று ஆய்வு செய்தார். திருவிழாவில் கடைகள் அமைக்கும் இடங்கள், கோவில் வளாகம், தேரோடும் வீதிகள், ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வரும் இடங்கள் ஆகிய இடங்களை அவர் பார்வையிட்டார்.

தேரோட்டம் மற்றும் திருவிழாவுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

அரசு மருத்துவமனை
முன்னதாக போடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். அங்கு டாக்டர்கள், பணியாளர்கள் வருகை பதிவேடு, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், போடியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதி ஆகிய இடங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அங்கு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, உணவின் தரம், சுகாதாரம், விடுதி பணியாளர்களின் வருகை குறித்து உரிய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர், போடி அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்து, ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப்பதிவேட்டை பார்வையிட்டார். 

பள்ளியில் குடிநீர், கழிப்பிடம், மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள், மாணவ, மாணவிகளுக்கான மதிய உணவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதுபோல், போடி மற்றும் போ.மீனாட்சிபுரம் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், போடி, மேலசொக்கநாதபுரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் ஆகிய இடங்களிலும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது போடி தாசில்தார் செந்தில்முருகன், நகராட்சி ஆணையாளர் ஷகிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story