உடைக்கப்பட்ட குழாய்கள் சரிசெய்யும் பணி எம்பி எம்எல்ஏ ஆய்வு


உடைக்கப்பட்ட குழாய்கள் சரிசெய்யும் பணி எம்பி எம்எல்ஏ ஆய்வு
x
தினத்தந்தி 4 May 2022 11:56 PM IST (Updated: 4 May 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உடைக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணியை எம.பி., எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர்.

திருப்பத்தூர்

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உடைக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணியை எம.பி., எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர்.

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை, அரூர், சேலம் வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை ரூ.530 கோடி செலவில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பத்தூரிலிருந்து ஊத்தங்கரை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆதியூர், கொரட்டி, தோரணம்பதி, சின்னாரம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால் அந்தப் பகுதியில் உள்ள குழாய்கள் உடைக்கப்பட்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், எம்.எல்.ஏ. விடமும் புகார்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சி.என்.அண்ணாதுரை எம்.பி., திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் லதா, உதவி கோட்ட பொறியாளர் பர்குணன், உதவி பொறியாளர் தேசிங்குராஜா, கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல், அனைத்து கிராமஊராட்சி பகுதிகளுக்கும் நேரில் சென்று தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து கிராம ஊராட்சிகளை இணைக்கும் குடிநீர் குழாய்களை பார்வையிட்டனர். 

அப்போது உடனடியாக குடிநீர் குழாய்களை சரிசெய்ய  ஒப்பந்ததாரரிடம் கூறப்பட்டது. குழாய்களை சரி செய்ய ரூ.40 லட்சம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும், 10 நாட்களில்  குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி கார்த்திக், நித்யானந்தம், எம்.சண்முகம், மேனகா விவேகானந்தன், ஒன்றிய கவுன்சிலர் தாமோதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story