அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை:
அக்னி நட்சத்திரம்
கோடை காலத்தில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. கொளுத்தும் கோடை வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயில் சுட்டெரிக்கும் என்பதை எண்ணி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் இடி, பலத்த காற்றுடன் மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்று இரவு 8 மணி அளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் சாலையில் கிடந்த குப்பைகள், புழுதிகள் பறந்தன. வானில் கருமேகங்கள் திரண்ட நிலையில் இரவு 8.20 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரம் இடைவிடாமல் ஓரே சீராக பெய்தது. அதேநேரத்தில் இடி சத்தமும், மின்னல் வெட்டும் பலமாக இருந்தது. மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள், இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் சற்று வெப்பம் தணிந்திருந்தது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. பொதுவாக அக்னிநட்சத்திரம் தொடங்கும் நாளிலும், முடிவடையும் நாளிலும் மழை பெய்யும் என கிராமப்புறங்களில் பேச்சு உண்டு. அந்த வகையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் நேற்று இரவு மழை பெய்துள்ளது.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளான ஆலவயல், அம்மன்குறிச்சி, தொட்டியம்பட்டி, ஏனாதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று திடீரென இரவு 8 மணிக்கு மேல் பலத்த காற்று, இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
ஆவூர்
விராலிமலை ஒன்றிய பகுதிகளான குன்னத்தூர், மதயானைப்பட்டி, கலிமங்களம் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஆவூர், பேராம்பூர், மலம்பட்டி, ஆலங்குடி, பாக்குடி, ஆம்பூர்பட்டிநால்ரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. சாலையோரம் மற்றும் வயல்வெளி பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அன்னவாசல்
இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, வயலோகம், மாங்குடி முக்கண்ணாமலைப்பட்டி, ஆரியூர், பரம்பூர், கடம்பராயன்பட்டி, பணம்பட்டி, கீழக்குறிச்சி, நார்த்தாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
காரையூர்
இதேபோல் மேலத்தானியம், கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, காரையூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென காற்றுடன் மழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story