புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மையங்கள் தயார் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வெழுதும் மாணவ-மாணவிகள்


புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மையங்கள் தயார் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வெழுதும் மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 5 May 2022 12:01 AM IST (Updated: 5 May 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. அடிப்படை வசதிகளை முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை:
தேர்வு மையங்கள்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 93 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 999 மாணவர்களும், 10 ஆயிரத்து 333 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளின் பதிவெண்கள் வகுப்பறை மற்றும் மேஜையில் எழுதப்பட்டுள்ளது. இதேபோல குடிநீர், மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதிகாரி ஆய்வு
இந்த நிலையில் தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சந்தைபேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டார். 
மேலும் அறைக்கண்காணிப்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு தான் பொதுத்தேர்வு முழுமையாக நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
பறக்கும்படை
தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கவும், மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கவும் 200-க்கும் மேற்பட்ட பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் எவ்வித பயமும் இல்லாமல் எழுதும்படி கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். தேர்வை எழுதவும் மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்தி கொண்டுள்ளனர். 
ஏற்கனவே செய்முறை தேர்வை எழுதியதால், பொதுத்தேர்வுக்கான பயம் அவர்களது மத்தியில் நீங்கியது. பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 28-ந் தேதி வரை பாட வாரியாக நடைபெற உள்ளது. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத்தாள்களை எடுத்து செல்லும் வழித்தடங்கள் குறித்து அலுவலர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம்
பிளஸ்-2 பொதுத்தேர்வை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந் தேதி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 638 மாணவர்களும், 11 ஆயிரத்து 360 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 298 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடிவடைகிறது. இதனை 10 ஆயிரத்து 253 மாணவர்களும், 10 ஆயிரத்து 764 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 17 பேர் எழுத உள்ளனர்.
மாணவர்களுக்கு பஸ் வசதி
தேர்வெழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பஸ் போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தில் பஸ்கள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக டவுன் பஸ்களை இயக்கவும், பஸ் நிலையத்தில் மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல ஆலங்குடி, திருமயம், கீரனூர், இச்சடி, வடவாளம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story