நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்


நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 5 May 2022 12:09 AM IST (Updated: 5 May 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீடாமங்கலம்;
நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீயணைப்பு நிலையம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரம் நீடாமங்கலம். இங்கு மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், நீதிமன்றம், போலீஸ் நிலையம், அஞ்சலகம், ரயில் நிலையம், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், அரசு ஆஸ்பத்திரி போன்றவை உள்ளன. 
இங்கு சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தீயணைப்பு நிலையம் சுமார் 30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த தீயணைப்பு நிலையம் முதலில் வெண்ணாற்றங்கரை அருகில் உழவர் சந்தை உள்ள இடத்தில் இருந்தது. பிறகு பழைய தாலுகா அலுவலகம் அருகில் சத்திரத்துக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது.
நவீன வசதிகளுடன்
தற்போது இந்த தீயணைப்பு நிலையம் நீடாமங்கலம் புதுத்தெருவில் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சுமார் 30 வருடங்களாக நீடாமங்கலம் தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் போதுமான வசதிகள் அற்ற நிலையில் உள்ளது.  நீடாமங்கலத்தில் அரசுக்கு சொந்தமான இடங்கள் இருந்தும் தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நிலையை போக்க கோரிக்கை விடுக்கப்பட்டும் இந்த கோரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 
எனவே நீடாமங்கலம் நகர பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நவீன வசதிகளுடன் தீயணைப்பு நிலையத்தை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story