மழையில் நனைந்து 1,000 நெல் மூட்டைகள் சேதம்
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மழையில் நனைந்து 1,000 நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.
செஞ்சி
அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதையடுத்து செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்தே வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியதால் புழுக்கம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்தனர். வெயிலுக்கு அஞ்சி சிலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இந்நிலையில் மாலை 4 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. அடுத்த சில நிமிடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1000 நெல் மூட்டைகள் சேதம்
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் வருவது வழக்கம். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அங்குள்ள திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மாலையில் பெய்த திடீர் மழையால் இந்த நெல்மூட்டைகள் அனைத்தும் நனைந்து சேதம் அடைந்தன.
நெல் மூட்டைகளை திறந்த வெளியில் அடுக்கி வைப்பதால் திடீரென பெய்யும் மழையில் அவைகள் நனைந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் நெல்மூட்டைகளை திறந்தவெளியில் வைப்பதை தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் வைத்து நெல்மூட்டைகளை எடை போட வேண்டும் என விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மலையனூர்
மேல்மலையனூரில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலை 4 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. அப்போது பலத்த காற்று வீசியது. அடுத்த சில நிமிடங்கிளில் இடி-மின்னலுடன் மழை வெழுத்து கட்டியது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது.
அதேபோல் சுற்றுப் புறப்பகுதிகளான சிறுதலைப்பூண்டி, முருகன் தாங்கல், மாந்தாங்கல், பறையன்தாங்கல், பழம் பூண்டி, செக்கடிக்குப்பம், கொடுக்கன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பூமிகுளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story