வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி
நண்பரின் பேஸ்புக் முகவரியை பயன்படுத்தி வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்
செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் குபேரன் மகன் தியானீஸ்வரன் (வயது 25). இவரது பேஸ்புக் முகவரிக்கு அவரது நண்பர் சதீஷ் என்பவரின் பேஸ்புக் முகவரியிலிருந்து பேஸ்புக் மெசஞ்சர் மூலம் தங்களது நண்பர் மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருப்பதால் அதற்கு பணம் அனுப்பி வைக்குமாறு கூறியதோடு செல்போன் எண்ணிலிருந்து கடந்த 21-2-2022 அன்று வங்கி கணக்கு எண்ணும் அனுப்பப்பட்டது. இதை உண்மை என்று நம்பிய தியானீஸ்வரன் மூன்று முறை தனித்தனியாக மொத்தம் ரூ.69 ஆயிரத்து 800-ஐ குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார்.
இதன் பின்னர் தியானீஸ்வரன் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் அவசர சிகிச்சையில் இல்லை என்பதும், அவரது பேஸ்புக் முகவரியை யாரோ மர்ம நபர் தவறாக பயன்படுத்தி தியானீஸ்வரனிடம் இருந்து ரூ.60 ஆயிரத்து 800-ஐ மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தியானீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story