அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திட்டக்குடியில் அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே மாளிகை கோட்டம் ஊராட்சி பாபுஜி நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும், கழிப்பறை வசதி செய்து தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்யப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இது தொடர்பாக சமாதான கூட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்ள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் முக்கிய அதிகாரியான வட்டார வளர்ச்சி அதிகாரி வரவில்லை. இதன் காரணமாக கூட்டம் நடைபெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் பாலசிங்கம் தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பு வட்டார வளர்ச்சி அதிகாரியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, தாசில்தார் கார்த்திக், சமூக நல திட்ட தாசில்தார்கள் ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சமாதான கூட்டத்தில் 2-வது முறையாக வட்டார வளர்ச்சி அதிகாரி கலந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறார் என கூறி அவரை கண்டித்து பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானபடுத்தினர். அதனை தொடர்ந்து சமாதான கூட்டம் நடந்தது. இதில் கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story