பாண்டியர் ஆட்சிகால சூலக்கல் கண்டுபிடிப்பு


பாண்டியர் ஆட்சிகால சூலக்கல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 May 2022 1:28 AM IST (Updated: 5 May 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் சின்னக்கண்ணனூரில் பிற்கால பாண்டியர் ஆட்சி கால அரசு முத்திரையுடன் கூடிய சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை ,
சிவகங்கை மாவட்டம் சின்னக்கண்ணனூரில் பிற்கால பாண்டியர் ஆட்சி கால அரசு முத்திரையுடன் கூடிய சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட சின்னக்கண்ணனூர் கிராமத்தில் பில்லனேரி கண்மாய் பகுதியில் சேங்கை முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழியில் 4 அடி உயரம் உள்ள கல் ஒன்று இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த அய்யனார் கொடுத்த தகவலின்படி பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்களான மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் சின்னக் கண்ணனூரைச் சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். 
இதில் அந்தக்கல் பிற்கால பாண்டியர் காலத்தில் நிறுவப்பட்ட அரசு முத்திரையுடன் கூடிய சூலக்கல் என்பதை கண்டறிந்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
பொதுவாக சூலக்கல் பயன்பாடானது அரசர்கள் வழி பாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு மேற்கொள்வதற்காக நிலங்களை வரி நீக்கி நிவந்தம் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சிவன், காளி, அய்யனார் கோவிலுக்கு வழங்கும் தானம் நிலதானம் என்றும் பெருமாள் கோவிலுக்கு வழங்கும் தானம் திருவிடையாட்டம் என்றும் சமண பவுத்த பள்ளிகளுக்கு வழங்கும் தானம் பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படும்.
தானம்
மேலும் தானமாக வழங்கும் நான்கு திசைகளிலும் எல்லைக் கற்கள் நடப்பட்டு கோவில் நிலங்களாக பாதுகாக்கப்படும் சிவன் கோவில்களுக்கு வழங்கும் நிலங்களில் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்டு சூலக்கற்கள் நடப்படும் சின்னக்கண்ணனூரில் கண்டறியப்பட்ட சூலக்கல் 4 அடி உயரமும் 1½ அடி அகலமும் கொண்டது. இந்த சூலக்கல்லில் ஒரு சூலம் புடைப்புச் சிற்பமாக இடம் பெற்று உள்ளது.
அகழாய்வு
இந்த திரிசூல புடைப்புச் சிற்பத்தின் வலதுபுறம் ஒரு மீனும் இடதுபுறம் ஒரு செண்டுகோலும் புடைப்புச் சிற்பமாக இடம்பெற்றுள்ளதை பார்க்கும் போது கி.பி. 1190 முதல் கி.பி. 1310 வரையிலான பிற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இந்த சூலக்கல் நிறுவப்பட்டு இருக்கலாம். இதன் மூலம் இந்தப்பகுதி பிற்கால பாண்டியர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்று தெரிகிறது. இந்த பகுதியை முறையான தொல்லியல் அகழாய்வுக்கு உட்படுத்தினால் பாண்டியர்களின் வரலாற்றை பறைசாற்றும் தொல்லியல் எச்சங்கள் வெளிப்படலாம்.
 இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story