இன்று நடைபெற இருந்த கர்நாடக மந்திரிசபை கூட்டம் திடீர் ரத்து


இன்று நடைபெற இருந்த கர்நாடக மந்திரிசபை கூட்டம் திடீர் ரத்து
x
தினத்தந்தி 5 May 2022 2:24 AM IST (Updated: 5 May 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை மாற்றப்பட இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த மந்திரிசபை கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:கர்நாடக மந்திரிசபை மாற்றப்பட இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த மந்திரிசபை கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.  

ஈசுவரப்பா மீது புகார்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) பொதுத்தேர்தல் நடக்கிறது.   அதாவது தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனால் பா.ஜனதா மேலிட தலைவர்கள் தங்களின் பார்வையை கர்நாடகத்தின் பக்கம் திருப்பியுள்ளனர். உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த ஒரு மாதத்தில் 2 முறை கர்நாடகம் வந்து சென்றுள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஒரு முறை வந்தார். ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த அக்கட்சியின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். 

கர்நாடக பா.ஜனதா அரசின் மந்திரிசபையில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன. அதனால் மந்திரிசபையை விஸ்தரிக்க வேண்டும் என்று பா.ஜனதாவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கர்நாடக பா.ஜனதா அரசு மீது சமீபகாலமாக ஊழல் புகார்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து எழுந்து வருகின்றன.

40 சதவீத கமிஷன்...

அரசு திட்ட பணிகளை மேற்கொள்ளும் காண்டிராக்டர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 40 சதவீத கமிஷன் வழங்கும்படி மந்திரிகள் வற்புறுத்துவதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அதைத்தொடர்ந்து கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா மீது காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் 40 சதவீத கமிஷன் கேட்பதாக புகார் கூறினார். 

இதுகுறித்து வாட்ஸ்-அப்பில் ஈசுவரப்பா மீது புகார் கூறிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து கர்நாடக பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஈசுவரப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இது பா.ஜனதா அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

சி.ஐ.டி. விசாரணை

இந்த கமிஷன் விவகாரம் அடங்குவதற்குள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணின் சகோதரருக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 

 கர்நாடகத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ள இந்த விவகாரம், பா.ஜனதா அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் உயர்கல்வித்துறையில் உதவி பேராசிரியர் பணி நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதிலும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மந்திரிசபை மாற்றம்

இப்படி தொடர் ஊழல் மற்றும் முறைகேடு புகார்களால் பா.ஜனதா அரசு சற்று துவண்டு போய் உள்ளது. அதனால் குஜராத்தை போல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட ஒட்டுமொத்தமாக மந்திரிசபையையே மாற்றிவிட்டு புதிய மந்திரிசபையை அமைக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்ததாக தகவல் வெளியானது. 

இ்ந்த பரபரப்பான சூழலுக்கு இடையே உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்து சென்றார். மந்திரிசபை மாற்றம் குறித்து ஏதாவது தகவல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

புதிய முகங்களுக்கு வாய்ப்பு

அவர் வந்து சென்ற பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றும் திட்டம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் தற்போது உள்ள அனைத்து மந்திரிகளையும் நீக்கிவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பியதும் அவருடன் பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து மந்திரிசபை மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அடுத்த ஓரிரு நாட்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிற 10-ந் தேதிக்குள் மந்திரிசபை மாற்றம் நடைபெறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த மந்திரிசபை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு அது வருகிற 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மந்திரிசபையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மந்திரிசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்மறையான தாக்கம்

தற்போது உள்ள மந்திரிகளை கைவிட்டால் பா.ஜனதாவில் போர்க்குரல் எழுவது உறுதி. அதை சமாளிக்க பா.ஜனதா தலைவர்கள் ஒரு திட்டத்தை வகுத்து உள்ளதாக தெரிகிறது. அதாவது தற்போது உள்ள மந்திரிகள் அனைவரையும் கட்சியை வலுப்படுத்தும் பணிகளுக்கு நியமிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. மந்திரிசபை மாற்றத்தால் ஏற்படும் எதிர்மறையான தாக்கம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் பா.ஜனதா மேலிடம் வலுவாக இருப்பதால் எத்தகைய சவாலையும் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று கா்நாடக பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள்.

Next Story