மீனாட்சி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்:“வெளியூர் பக்தர்களின் வயிற்று பசியை போக்கும்”


மீனாட்சி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்:“வெளியூர் பக்தர்களின் வயிற்று பசியை போக்கும்”
x
தினத்தந்தி 5 May 2022 2:56 AM IST (Updated: 5 May 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது சட்டசபையில் நேற்று அமைச்சர் அறிவித்தார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது சட்டசபையில் நேற்று அமைச்சர் அறிவித்தார். 

வரவேற்கத்தக்கது

இந்த திட்டம் குறித்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது சென்னையை சேர்ந்த பக்தர் தமிழரசி ஆறுமுகம் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரசு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்க இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இங்கு பழங்காலத்தில் கோவில் அருகே உள்ள அன்னக்குழி மண்டபம் பகுதியில் மீனாட்சி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் தோறும் அன்னதானம் வழங்கப்பட்டதாக கூறுவார்கள். அந்த கூற்றை தற்போது அரசு உண்மையாக்கி உள்ளது. மேலும் பழனி கோவிலுக்கு எப்போது சென்றாலும் அன்னதானம் சாப்பிடுவது போன்று இங்கும் காலை முதல் இரவு வரை வழங்க வேண்டும். அங்கு உள்ளது போன்று இங்கும் பெரியதாக அன்னதான கூடம் அமைக்க வேண்டும். தற்போது கோவிலுக்கு உள்ளூர் பக்தர்களை காட்டிலும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். எனவே அவர்களது வயிற்று பசியை போக்கும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறினார்.

அதிக பக்தர்கள் பயன்அடைவார்கள்

மதுரையை சேர்ந்த சோலைராஜ் கூறும் போது,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் நான் வந்து செல்கிறேன். தற்போது மதியம் நேரத்தில் மட்டும் தான் அன்னதானம் குறைவான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு அறிவித்த நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் மூலம் அதிகமான பக்தர்கள் பயன் அடைய உள்ளனர். மேலும் மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. எனவே மதியம் கோவில் நடை அடைக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதிக்க வேண்டும். தற்போது கோவிலுக்கு வெளியூரிலிருந்து அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். எனவே அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார்.

பாராட்டுக்கு உரியது

காரைக்குடியை சேர்ந்த பரமேஸ்வரி கார்த்திக் கூறியதாவது:-
நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாதம் ஒருமுறை குழந்தையுடன் வந்து விடுவேன். 2 முறை மதியம் அன்னதானம் டோக்கன் வாங்கி சாப்பிட்டு உள்ளேன். மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் அந்த அன்னதானம் வழங்கப்படுவது பக்தர்கள் பலருக்கு தெரியாது. எனவே கோவிலில் அன்னதானம் வழங்குவதை பக்தர்கள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகை கோவில் வளாகம் முழுவதும் வைக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான் முதன் முதலில் லட்டு பிரசாதம் நாள் முழுவதும் வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்க உள்ளது மிகவும் பாராட்டுக்கு உரியது என்றார்.
மதுரையை சேர்ந்த சரோஜா கூறும் போது.
நான் தினமும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து செல்வேன். அடிக்கடி கோவிலில் அன்னதான பிரசாதத்தை நீண்ட வரிசையில் நின்று சாப்பிடுவேன். தற்போது அரசு அறிவித்துள்ள நாள் முழுவதும் அன்னதான திட்டம் பக்தர்கள் அனைவருக்கும் மிகவும் பாக்கியம். ஏன் என்றால் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டம் சென்றடைய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்ய வேண்டும் என்றார்.

Next Story