ஈரோடு மாநகராட்சி கூட்டம்: ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார்?- கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்


ஈரோடு மாநகராட்சி கூட்டம்: ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார்?- கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 5 May 2022 4:02 AM IST (Updated: 5 May 2022 4:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார்? என்று கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார்? என்று  கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
தீர்மானத்தின் மீது கேள்வி
ஈரோடு மாநகராட்சி மன்றத்தில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சு.நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், கூட்டப்பொருள் எனப்படும் கூட்ட தீர்மானங்களை மாநகராட்சி பணியாளர் வாசித்தார். அப்போது ஒரு சில தீர்மானங்கள் மீதான சந்தேகங்களை காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் சபுராமா மின்ஹாக் பேசி கேள்வி எழுப்பினார். அவர் பேசத்தொடங்கியதும், தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் எழுந்து வார்டு வாரியாக அல்லது மண்டல வாரியாகத்தான் கவுன்சிலர்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று மேயருக்கு வேண்டுகோள் விடுத்தார். அப்போது காங்கிரஸ் கவுன்சிலர், நான் எனது வார்டு மக்களின் பிரச்சினை மற்றும் கோரிக்கைகளை மட்டும்தான் எனது முறைவரும்போது பேச முடியும். கூட்டப்பொருள் வாசிக்கும்போது, பேசினால்தான், தவறுகள் இருந்தால் அதை நிறைவேற்றும் முன்பே திருத்தம் செய்ய முடியும் என்றார். ஆனால், அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தி.மு.க. கவுன்சிலர்கள் பலரும் கேள்வி எழுப்பக்கூடாது என்று கூச்சல் எழுப்பினார்கள்.
நடைமுறை
அப்போது காங்கிரஸ் மாவட்ட தலைவரும் கவுன்சிலருமான ஈ.பி.ரவி எழுந்து, கூட்டப்பொருள் வாசிக்கும்போதுதான் அதுபற்றிய கேள்வி கேட்க முடியும். இது தவறு என்று கூறக்கூடாது என்றார். அவருக்கும் தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அ.தி.மு.க. கவுன்சிலர் ஏ.ஆர்.ஜெகதீசன் எழுந்து, தீர்மானங்கள் படிக்கும்போது அதுபற்றி சந்தேகங்கள் கேட்டு நிவர்த்தி செய்வதுதான் நடைமுறை. அதை மாற்ற வேண்டாம். அவர் கேட்பதில் தவறு இல்லை என்றார்.
ஆனால் தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் மேயர் தலையிட்டு கூட்டப்பொருள் மீது தவறுகள் இருந்தால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் முறை வரும்போது அதை குறிப்பிட்டு பேசலாம். கடைசியில் தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்றார். அதன் பிறகு கவுன்சிலர்கள் சற்று அமைதியானார்கள்.
கூட்டணி கட்சிகளான தி.மு.க.வும் காங்கிரசும் மோதிக்கொள்ள, காங்கிரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஊராட்சிக்கோட்டை திட்டம்
இதுபோல், 1-வது மண்டல தலைவர் ப.க.பழனிச்சாமி பேசும்போது, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று குறிப்பிட்டு, வ.உ.சி.பூங்காவில் உள்ள குடிநீர் தொட்டியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி மேயர், துணை மேயர், ஆணையாளர், மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பெயர் கொண்ட கல்வெட்டு பதிக்க வேண்டும் என்றார்.
பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலரும், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான தங்கமுத்து பேசும்போது, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டார். உடனடியாக தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று எதிர் முழக்கம் எழுப்பினார்கள். 2 தரப்பினரும் சேர்ந்து மாறி மாறி ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை தங்கள் கட்சி தலைவர்கள்தான் கொண்டு வந்தனர் என்று விவாதித்தனர்.
கூச்சல் குழப்பம்
இதனால் சிறிது நேரம் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கு கூச்சல் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.
இந்த கேள்விகளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அதிகாரிகளும், மேயர், துணை மேயரும் திகைத்துக்கொண்டு இருந்தனர். பின்னர் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் எழுந்து, இந்த மாமன்றம் மக்கள் பிரச்சினைகளைப்பற்றி பேசி, அதை சரி செய்வதற்காகத்தான். எந்த திட்டமாக இருந்தாலும் அதை மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும். ஊராட்சிக்கோட்டை திட்டம் கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்ததாக இருந்தாலும் அதை நிறுத்தி விடாமல் மக்களுக்காக இன்னும் வேகமாக தி.மு.க. அரசு செய்கிறது என்றார். அவர் இப்படி பேசியதும் அ.தி.மு.க.வினர் மேஜையை தட்டி வரவேற்றும், தி.மு.க.வினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால் விவாதம் முற்று பெற்றதால் தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசினார்கள். தேவையற்ற விவாதங்கள் வேண்டாம். மக்கள் பணிக்கான ஆரோக்கியமான விவாதத்தை தொடர்வோம் என்றும் கவுன்சிலர்கள் பேசினார்கள். இந்த 2 விவாதங்களால் நேற்று மாநகராட்சி மன்ற கூட்டம் பரபரப்பாக நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், உதவி ஆணையாளர்கள் சண்முகவடிவு, விஜயா, பொறியாளர்கள் சோமசுந்தரம், பாஸ்கர், சரவணன், மண்டல தலைவர்கள் சசிக்குமார், குறிஞ்சி தண்டபாணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Next Story