விவசாயிகளுக்கு எது பயன் தரும் என்பதை பார்க்காமல் கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் பிரச்சினை திசை மாறுகிறது- புதிய சங்கம் தொடக்கம்


விவசாயிகளுக்கு எது பயன் தரும் என்பதை பார்க்காமல் கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் பிரச்சினை திசை மாறுகிறது- புதிய சங்கம் தொடக்கம்
x
தினத்தந்தி 4 May 2022 10:32 PM GMT (Updated: 4 May 2022 10:32 PM GMT)

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் போடும் பிரச்சினையில் போராட புதிதாக ஒரு சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் விவசாயிகளுக்கு எது நன்மை தரும் என்பதை பார்க்காமல் பிரச்சினையை திசைமாறி பயணிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் போடும் பிரச்சினையில் போராட புதிதாக ஒரு சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் விவசாயிகளுக்கு எது நன்மை தரும் என்பதை பார்க்காமல் பிரச்சினையை திசைமாறி பயணிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
கீழ்பவானி
ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பாசன நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்குவது பவானிசாகர் அணையும், கீழ்பவானி பாசன வாய்க்கால்களும் ஆகும். சுமார் 200 கிலோ மீட்டர் அளவுக்கு பிரதான வாய்க்கால்களுடன் பரந்து விரிந்து 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கருக்கு நேரடியாகவும், பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு மறைமுகமாகவும் பாசனம் அளிக்கிறது கீழ்பவானி வாய்க்கால்.
ஒற்றைப்படை, இரட்டைப்படை முறையில் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் பாசனம் வழங்கினாலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்ற புகார் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கிடையே கீழ்பவானி வாய்க்காலில் மண் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாகவும் புகார்கள் வந்தன.
சீரமைப்பு
எனவே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதுதொடர்பாக ஒரு திட்டம் போடப்பட்டது. அப்போது ஒருதரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த திட்டம் மாற்றப்பட்டு தேவையான இடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பது என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாய்க்கால் சீரமைப்பு என்ற பெயரில் நபார்டு வங்கி கடனாக ரூ.710 கோடி பெறப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் எந்த ஒரு சூழலிலும் கான்கிரீட் போட அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு தரப்பு விவசாயிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
அதே நேரம் கான்கிரீட் போட்டால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியும். எனவே உடனடியாக பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இதுதொடர்பாக 2 தரப்பினருக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டங்களில் கூட முடிவு எட்டப்படவில்லை.
புதிய சங்கம்
2 தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தநிலையில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்கம் என்ற பெயரில் புதிதாக ஒரு சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மாலை சிவகிரியில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன தாரர்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தலைவராக எஸ்.பெரியசாமி, செயலாளராக கி.வே.பொன்னையன், பொருளாளராக எம்.வி.சண்முகராஜ், துணைத்தலைவராக சதாசிவம் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
செய்தி தொடர்பாளர்களாக கி.வே.பொன்னையன், கே.ஆர்.தங்கராஜு, சுப்பு என்கிற முத்துசாமி ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாநாடு
மேலும், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது கிடைத்து உள்ள 90 நாட்கள் இடைவெளியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை தலைமை செயலாளர் ஆகியோர் உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்றும், வருகிற ஜூன் மாதம் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு சிவகிரியில் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கான்கிரீட் தளம் வேண்டாம் என்று பெருந்துறையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், குடும்பத்துடன் வந்து ஒரு மாநாட்டை நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு வேண்டும் என்று ஒரு மாநாட்டை கூட்டப்போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
திசைமாறுகிறது
இதற்கிடையே முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் 2 தரப்பு விவசாயிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் கருத்தை வலியுறுத்தி கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது பிரச்சினை திசைமாறுவது போன்று தெரிகிறது. விவசாயிகள் அவரவர் கருத்தில் தீர்மானமாக இருக்கிறார்கள். அதே நேரம், ஒவ்வொரு தரப்பிலும் முதன்மையான வழிநடத்தல் செய்பவர்களை குறிப்பிட்டு வசைபாட தொடங்கி இருப்பதும் இப்போது பரவலாக நடந்து வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்தநிலையில் விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு இல்லாத ஒரு நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும். கீழ்பவானி சீரமைப்பு பணிகள் என்ற பெயரில் உண்மையில் எப்படிப்பட்ட பணி நடைபெற உள்ளது. உண்மையில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறதா?. கீழ்பவானி கசிவு நீர் பாதிப்பு ஏற்படுமா?. பச்சை பசலென்று இருக்கும் பாசன பகுதிகள் பாலைவனமாகி விடுமா?. என்ற கேள்விகளுக்கும், கீழ்பவானியில் சீரமைப்பு பணி செய்வதால் ஒரு விவசாய நிலம் கூட பாதிக்கப்படாது என்று கூறும் பதில்களிலும் என்ன உண்மை என்பதை முழுமையாக அரசு விளக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அரசு தலையிட வேண்டும்
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
கீழ்பவானி பாசன வாய்க்கால் என்பது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, 3 மாவட்டங்கள் குறிப்பாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களுக்கும் உயிர்நாடியாகும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. தொடக்கத்தில் கான்கிரீட் அமைப்பு அல்லது சீரமைப்பு பணி என்ற பிரச்சினை எதிர்ப்பு, ஆதரவு என்ற 2 கோணங்களில் சென்றது. இதில் அதிகாரிகளின் விளக்கம் அல்லது செயல்பாடு சமரசம் ஏற்படுத்தும் என்ற நிலை இருந்தது.
ஆனால், தற்போது தனி மனித தாக்குதல்கள் தொடங்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஆயக்கட்டுக்கான உரிமைதாரர்கள், ஆயக்கட்டு உரிமை இல்லாதவர்கள் என்ற பிரச்சினையும் எழுந்து உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த நிலை நீடிப்பது விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாக இருக்காது. இதில் அரசு உடனடியாக தலையிட வேண்டும்.
பாதிப்பு- பாதிப்பு இல்லை
அரசு சார்பில் மேற்கொள்ள இருக்கும் இந்த சீரமைப்பு திட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்து உள்ளனர். அதே நேரம் ஏற்கனவே பல்வேறு கால்வாய்களில் கான்கிரீட் திட்டம் அல்லது லைனிங் திட்டம் என்று போடப்பட்ட திட்டங்கள் தோல்வியில் முடிந்து இருப்பதாக ஒரு தரப்பு விவசாயிகள் கூறுகிறார்கள்.
நல்ல திட்டம் என்பது ஏட்டில் இருப்பதாகவும், பாதிப்பு ஏற்பட்டு இருப்பதே கடந்தகால அனுபவம் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு தரப்பினர் கசிவு நீரில் பாதிப்பு வராது. கடைமடைக்கும் தண்ணீர் கிடைக்கும். யாருக்கும் பாதிப்பு இல்லை என்கிறார்கள்.
இதில் எது உண்மை என்பதில் நடுநிலை விவசாயிகளுக்கு எதுவும் தெரியவில்லை. சீரமைப்பு என்ற பெயரில் கான்கிரீட் போட அனுமதித்தால், தொடர்ந்து முழுமையாக கான்கிரீட் போட்டு விடுவார்கள் என்பது விவசாயிகளின் அச்சமாக இருக்கிறது. எனவே பலமிழந்ததாக கருதப்படும் கரைகளை மீண்டும் மண் கொட்டி பலப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஒருமித்த கருத்து
கீழ்பவானி பிரச்சினைக்கு தீர்வு காண 2 தரப்பு விவசாயிகளும் ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டும். 2 தரப்பினரின் சந்தேகங்களையும் பரீட்சார்த்த முறையில் செயல்முறை வடிவில் செய்ய வேண்டும்.
கீழ்பவானியில் 1 அல்லது 2 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதியை தேர்வு செய்து, தற்போது அரசு அனுமதித்து இருக்கும் செயல் திட்டத்தை மேற்கொள்ளலாம். ஒரு ஆண்டு இந்த பகுதியில் தண்ணீர் பாசனத்தின் போது மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதையும் கண்காணிக்கலாம்.
விருப்பம்
இப்படி செய்வதன் மூலம் அதிகாரிகள் தங்கள் திட்டம் சரியானதாக இருந்தால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என 2 தரப்பினருக்கும் தெளிவுபடுத்தலாம். அதை பார்த்து விவசாயிகள் கீழ்பவானி சீரமைப்பு திட்டம் வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்யட்டும்.
இது ஆரோக்கியமானதாக இருக்கும். அதைவிட்டு விவசாயிகள் போட்டி மனப்பான்மையுடன் வெவ்வேறு திசையில் பயணிப்பதும், ஒருவருக்கொருவர் புகார்கள், விமர்சனங்கள் என்ற பெயரில் சேற்றை வாரி இறைப்பதும் சரியல்ல. விவசாயிகளின் உழைப்பில்தான் அனைவரும் உணவு சாப்பிட்டு நிம்மதியாக உறங்குகிறார்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்து சிறந்த தீர்வு காண வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story