அம்மாபேட்டை ஒலகடம் சொக்கநாச்சியம்மன் கோவில் குண்டம் விழா- ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
அம்மாபேட்டை ஒலகடம் சொக்கநாச்சியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை ஒலகடம் சொக்கநாச்சியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
சொக்கநாச்சியம்மன்
அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடத்தில் பழமையான ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சி அம்மன், மாரியம்மன், அக்கரைப்பட்டி முனியப்பன் கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. ஆண்டு தோறும் இந்த கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, விஷேச பூஜைகள் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு சொக்கநாச்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பொங்கல் வைத்து பூஜை செய்து கோவில் முன்பு 60 அடி நீள குண்டம் அமைக்கப்பட்டது.
தீ மிதித்தார்கள்...
இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் படைக்கலம் அழைத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்க தொடங்கினார்கள்.
அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
குண்டம் விழாவை தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது, வருகிற 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.
Related Tags :
Next Story