பங்கு விற்பனையை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்


பங்கு விற்பனையை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 5 May 2022 4:38 AM IST (Updated: 5 May 2022 4:38 AM IST)
t-max-icont-min-icon

பங்கு விற்பனையை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:
எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகத்தில் நேற்று காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை ஊழியர்கள் அனைவரும் 2 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கோட்ட சங்க தலைவர் நரசிம்மன் தலைமையில் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலியபெருமாள், கலைச்செல்வி உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் எல்.ஐ.சி. அலுவலக பணி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது, 3.5 சதவீத பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சி. நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story