ரசாயனம் தெளித்து பழுக்க வைப்பதாக புகார்: சேலத்தில் 1½ டன் மாம்பழங்கள் பறிமுதல்-உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


ரசாயனம் தெளித்து பழுக்க வைப்பதாக புகார்: சேலத்தில் 1½ டன் மாம்பழங்கள் பறிமுதல்-உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 May 2022 4:42 AM IST (Updated: 5 May 2022 4:42 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரசாயனம் தெளித்து பழுக்க வைப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து 1½ டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்:
சேலத்தில் ரசாயனம் தெளித்து பழுக்க வைப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து 1½ டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாம்பழ சீசன்
சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் சேலத்திற்கு லாரிகளில் மாம்பழங்கள் கொண்டு வந்து மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு விளைச்சல் குறைவாக இருந்தாலும் மண்டிகளில் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பலரும் மாம்பழங்களை விரும்பி வாங்கி செல்கிறார்கள். இதுதவிர, சேலம் கடைவீதியில் உள்ள குடோன்களில் இருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
குடோனில் ஆய்வு
இதனிடையே, சேலம் டவுனில் உள்ள சில மாம்பழ குடோன்களில் ரசாயன மருந்து தெளித்து மாம்பழங்கள் பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் புஷ்பராஜ், சுருளி, ஆரோக்கியபிரபு, சிவலிங்கம் ஆகியோர் நேற்று மதியம் சின்னக்கடைவீதியில் உள்ள குப்புசாமி மற்றும் உமாபதி ஆகிய 2 பேருக்கு சொந்தமான மாமபழ குடோன்களில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது, ரசாயன மருந்து தெளித்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 குடோன்களில் இருந்து சுமார் 1½ டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நடவடிக்கை
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், எதிப்பான் என்ற ரசாயன மருந்தை மாம்பழத்தின் மீது தெளிக்கிறார்கள். இதனால் மாம்பழத்தின் மேல் பகுதியானது நிறம் மாறிவிடும். பார்க்கும்போது மாம்பழம் பழுந்தது போல் தெரியும். இதுபோன்ற மாம்பழங்களை சாப்பிடும்போது உடலில் அஜீரணம் ஏற்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மாம்பழங்களை ரசாயனம் மருந்து தெளித்து பழுக்க வைக்கும் குடோன்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Next Story