சேலத்தில் பரிதாபம்:இன்று தேர்வு எழுத இருந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை-போலீஸ் விசாரணை


சேலத்தில் பரிதாபம்:இன்று தேர்வு எழுத இருந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை-போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 5 May 2022 4:56 AM IST (Updated: 5 May 2022 4:56 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இன்று தேர்வு எழுத இருந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:
சேலத்தில் இன்று தேர்வு எழுத இருந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி
சேலம் தாதம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சுவீதா. இவர்கள் இருவரும் இறந்து விட்டனர். இவர்களது மகள் பிரகதி (வயது 17). பெற்றோர் இறந்து விட்டதால் பிரகதி, அவருடைய அத்தை சாந்திராஜா என்பவருடன் வசித்து வந்தார். அவர்களது வீட்டில் இருந்தே சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அவர், பிளஸ்-2 தேர்வுக்காக மும்முரமாக படித்து வந்தார். இன்று (வியாழக்கிழமை) பிளஸ்-2 தேர்வு எழுத இருந்தார். இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரகதி நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணை
வெளியில் சென்று இருந்த சாந்திராஜா வீட்டிற்கு வந்தார். அப்போது பிரகதி, அவர் தங்கி இருந்த அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சாந்திராஜா சத்தம் கொடுத்து அழைத்து பார்த்தார். அப்போது பிரகதி அறையில் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை.
இதில் சந்தேகம் அடைந்த சாந்திராஜா, பிரகதி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வீராணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இன்று தேர்வு எழுத இருந்த நிலையில் பிளஸ்-2  மாணவி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story