கோயம்பேடு பஸ் நிலையத்தில் 43 பேர் மீட்பு: சென்னையில் ஆதரவற்றோர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள்


கோயம்பேடு பஸ் நிலையத்தில் 43 பேர் மீட்பு: சென்னையில் ஆதரவற்றோர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள்
x
தினத்தந்தி 5 May 2022 8:19 AM IST (Updated: 5 May 2022 8:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஆதரவற்றோர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவித்தார்.

சென்னை,  

சென்னையில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்ற முதியோர், சிறுவர்கள், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தங்குவதற்காக மாநகராட்சி சார்பில் 54 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த காப்பகங்களில் 1,741 பேர் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலைய வளாகத்தில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோர் இரவு நேரங்களில் வளாகத்தில் உள்ள நடைபாதைகளில் தங்கி வருவதாக மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை இணைந்து கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோரை மீட்க சிறப்பு மீட்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் இரவு தங்கியிருந்த வீடற்ற மற்றும் ஆதரவற்றோர் 27 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என 43 பேரை மீட்டு மாநகராட்சி காப்பகங்களில் தங்க வைத்தனர்.

சென்னையில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோர்கள் தங்கி இருந்தால் அது குறித்த தகவல்களை 94451 90472 மற்றும் 044-25303849 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story