வேகத்தடையில் வேகமாக சென்றபோது விபத்து: சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
வேகத்தடையில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் பெண் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை,
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 25). இவருக்கு செல்போன் செயலி மூலம் திருச்சியை சேர்ந்த தமிழரசி (22) மற்றும் வந்தவாசியை சேர்ந்த ஐஸ்வர்யா (22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. தற்போது தமிழரசி, ஐஸ்வர்யா இருவரும் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, வேலை தேடி வந்தனர்.
நேற்று அதிகாலை பிரவீன், தமிழரசி, ஐஸ்வர்யா ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் அடையாறில் இருந்து மயிலாப்பூர் நோக்கி துர்காபாய் தேஷ்முக் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை நேரம் என்பதாலும், சாலையில் அதிகளவு வாகனங்கள் செல்லவில்லை என்பதாலும் பிரவீன் தனது மோட்டார் சைக்கிளை அதிவேகமாக இயக்கியதாக தெரிகிறது. நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தின் அருகே உள்ள வேகத்தடையின் மீதும் அதே வேகத்தில் வாகனத்தை செலுத்த கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது படுவேகமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 3 பேரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரவீன், ஐஸ்வா்யா இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான தமிழரசி உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீன் போதையில் வாகனத்தை ஓட்டி வந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story