சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் 30 வயது இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை


சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் 30 வயது இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 5 May 2022 10:34 AM IST (Updated: 5 May 2022 10:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் 30 வயது இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

சென்னை,

தொற்று காலத்தை கருத்தில் கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் அந்த சிகிச்சைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த வாரம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு இதயம் கொண்டு வரப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

அதன் தொடர்ச்சியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் ரெயிலில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த 19 வயது வாலிபரின் இதயம், அவரின் பெற்றோர் ஒப்புதலுடன் பெறப்பட்டு, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் கடந்த 4 மாதங்களாக இதய பிரச்சினையால் அவதிப்பட்டு, இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த இளையராஜா (வயது 30) என்பவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த அறுவை சிகிச்சையை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியின் இதய நோய் நிபுணர்களான டாக்டர்கள் மனோகரன், அபிநயவல்லவன், எழிலன், ராகேஷ், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் விவேகானந்தன், பார்த்தசாரதி, மீனா, கலைவாணி ஆகிய 8 பேர் அடங்கிய குழுவினர் செய்து சாதனை படைத்திருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் நடக்கும் 9-வது இதய மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும். இளையராஜாவுக்கு இந்த சிகிச்சை முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது.

தற்போது இதயம் பொருத்தப்பட்ட இளையராஜா நலமுடன் இருப்பதாக, அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அப்போது அவருடன் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

Next Story