‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 5 May 2022 3:01 PM IST (Updated: 5 May 2022 3:01 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதிய வண்ணத்தில் மின் இணைப்பு பெட்டி

சென்னை பெரம்பூர் சாமியார் மடம் சந்திரயோகி சமாதி ரோட்டில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக இருப்பது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு உடனடி தீர்வாக மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை சரி செய்ததோடு அதற்கு வர்ணமும் பூசியுள்ளார்கள். இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மின் வாரியத்துக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


உடைந்த பெயர் பலகை, புத்துயிர் பெறுமா?

சென்னை வில்லிவாக்கம் தாதங்குப்பம் காமராஜர் தெருவிலுள்ள பெயர் பலகை உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் தெருவுக்கு கூரியர் கொடுக்க வருபவர்களும், தெருவில் புதிதாக குடியேற வருபவர்களும் முகவரியை கண்டுபிடிப்பத்தில் சிரமம் ஏற்படுகிறது. உடைந்த பெயர் பலகை மீண்டும் புத்துயிர் பெறூமா?

- ஜோசப், தாதங்குப்பம்.



நிழற்குடையும், காத்திருப்பும்!

சென்னை பூக்கடை காவல்நிலையம் பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். இது வெயில் காலம் என்பதால் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களும், முதியவர்களும் வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நிழற்குடை அமையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

- ராஜன், பூக்கடை.

சாலை பணி எப்போது முடியும்?

சென்னை அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, பாடி ஆகியவற்றை இணைக்கும் சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் 15 நாட்களுக்கு மேல் ஆகியும், சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளமான இடத்தை கடந்து செல்லும் போது வாகனத்தில் செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் சூழலும் அதிகமாக இருக்கிறது. எனவே சாலையை புதுப்பித்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜேஷ், சாலைவாசி.



சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

சென்னை ஏகாங்கிபுரம் 4-வது தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் சாலைவாசிகள் எச்சரிக்கையுடனே பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. எனவே உடைந்த மூடியை அகற்றிவிட்டு, பாதாள சாக்கடைக்கு புதிய மூடியை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

- ராபின், ஏகாங்கிபுரம்.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளலூர் கொள்ளுமேடு கிராமம் கே.வி.எஸ் நகர் 2-வது தெருவில் அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த மின்கம்பம் ஒரு பக்கம் சாய்ந்து இருப்பதால், எந்த நேரத்திலும் கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. எனவே மின் வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுகிறோம்.

-மனோகரன்,கே.வி.எஸ். நகர்.



நடவடிக்கை எடுப்பார்களா?

சென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே ரெட்டேரியிலிருந்து அண்ணாநகர் செல்லும் சாலையோரத்தில் சிலர் படுத்து உறங்குகிறார்கள். மேலும் அந்த இடத்திலேயே அவர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதனால் அந்த இடத்தை கடந்து சென்றாலே மூக்கை பொத்திக்கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

- பொதுமக்கள்.

மின்கம்பத்தின் அவல நிலை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயில் டாக்டர் மூர்த்தி நகர் புத்துக்கோயில் அருகே அமைந்துள்ள மின் கம்பம் சேதமடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த மின் கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரியும்படியும் இருப்பதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

- மணிமாறன், திருமுல்லைவாயில்.

நடைபாதை ஆக்கிரமிப்பு

சென்னை பட்டாளம் காவல்துறை குடியிருப்பு அருகே இருக்கும் பஸ்நிறுத்தம் மற்றும் நடைபாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வயதானவர்கள் நடைபாதையில் நிற்க முடியாமல் சாலையில் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே நடைபாதை ஆக்கிரமிப்பு நிரந்தரமாக தடுக்கப்படுமா?

- சாலைவாசிகள்.

எரியாத விளக்குகள்

திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரில் உள்ள சாலை விளக்கு எரியாமல் உள்ளது. நீண்ட நாட்களாக எரியாமல் இருக்கும் சாலை விளக்கால் வாகனத்தில் செல்பவர்களும், சாலைவாசிகளும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே எரியாமல் இருக்கும் சாலை விளக்கை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

- சுனில், திருவள்ளூர்.




Next Story