கயத்தாறு அருகே நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது


கயத்தாறு அருகே நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும்  2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2022 5:53 PM IST (Updated: 5 May 2022 5:53 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு:
கயத்தாறு அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.
ஆட்டோ டிரைவர் கொலை
கயத்தாறு அருகே கடம்பூர் மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் துரைப்பாண்டி(வயது35). ஆட்டோ டிரைவர். கடந்த சிலஆண்டுகளாக இவர் கோவில்பட்டி ஊரணி தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது கயத்தாறு பகுதிக்கு வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று அவர் தளவாய்புரம் அருகில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர் கும்பல் துரைப்பாண்டி உள்பட 4 பேரையும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் துரைப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கயத்தாறு போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த மகாராஜன், ராஜாராம், மனோஜ், சவலாப்பேரியை சேர்ந்த ஜானகிராம், கோவில்பட்டி காந்திநகரை சேர்ந்த சின்னத்துரை ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் 2 பேர் கைது
மேலும் தலைமறைவாக இருந்த சவலாப்பேரியை சேர்ந்த பூல்பாண்டி, திருமணங்குறிச்சியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் கயத்தாறு போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த 2 பேரையும் போலீசார் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
கைதானவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், நாங்கள் கயத்தாறு பகுதியில் வீடு வீடாக சென்று மக்கள் தேவையில்லை என்று எங்களுக்கு கொடுக்கும் ரேஷன் அரிசியை வாங்கி, சேகரித்து மொத்தமாக விற்று வந்தோம். இதுகுறித்து மாகாராஜன், ஆறுமுகப்பாண்டி, துரைப்பாண்டி உள்ளிட்ட 4 பேர்  தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் சென்று புகார் மனு கொடுத்தனர். 
அதில் எங்கள் பெயரை சுட்டிக்காட்டி ரேஷன் அரிசியை கடத்துவதாகவும், நடவடிக்கை எடுக்கவும் கூறியிருந்தனர். இதனால் நாங்கள் அவர்கள் மீது கோபமாக இருந்தோம். இந்த நிலையில் 4 பேரும்  தளவாய்புரம் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்து கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. நாங்கள் அங்கு சென்று, அவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டோம். இதில் துரைப்பாண்டி இறந்துவிட்டார். பின்னர் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்’ என தெரிவித்துள்ளனர்.

Next Story