ரூ.5½ லட்சம் இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது


ரூ.5½ லட்சம் இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2022 7:42 PM IST (Updated: 5 May 2022 7:42 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்து ரூ.5½ லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோத்தகிரி

கோத்தகிரி அருகே தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்து ரூ.5½ லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேயிலை தொழிற்சாலை

கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 51). இவருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கொட்டக்கம்பை அருகே உள்ளது. இந்த தொழிற்சாலை செயல்படாததால் பூட்டி வைக்கப்பட்டு, காவலாளி ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி காலை தொழிற்சாலை காவலாளி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது தொழிற்சாலையில் நுழைவு வாயில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தொழிற்சாலை உள்ளே சென்று பார்த்தார்.

இரும்பு பொருட்கள் திருட்டு

அப்போது தொழிற்சாலையில் இருந்த ரூ.5 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு தளவாட பொருட்கள் திருட்டு போயிருந்தது. உடனடியாக இதுகுறித்து தேயிலை தொழிற்சாலை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். 

தொடர்ந்து ஜெகதீஷ் திருட்டு சம்பவம் குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திருட்டுபோன இரும்பு தளவாடங்கள் ஏற்றிய லாரி மேட்டுப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

3 பேர் கைது

அதன்பேரில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும், லாரியில் இருந்த இரும்பு தளவாட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்து திருடிய தருமபுரியை சேர்ந்த கோபால் (52), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முத்துகுமார் (36), மற்றும் லாரி டிரைவர் சித்திக் பாஷா (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.
கைதான 3 பேரையும் போலீசார் கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story