கூடலூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
கூடலூர் பகுதியில் 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஏராளமான வாழைகள் முறிந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஏராளமான வாழைகள் முறிந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
2-நாளாக சூறாவளி காற்றுடன் மழை
கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தது. மேலும் கோவில் கோபுரமும் சேதமடைந்தது. நேற்று முன்தினம் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. இரவு 9.15 மணிக்கு திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து மழையும் பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது காற்றின் காரணமாக கூடலூர் நந்தட்டி உள்பட பல இடங்களில் வாழைகள் முறிந்து சேதமானது. இதேபோல் சில இடங்களில் வீட்டின் மேற்கூரைகளும் பெயர்ந்தது.
விவசாயிகள் கவலை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிற நிலையில் கடந்த சில தினங்களாக திடீரென சூறாவளி காற்றுடன் பெய்து வரும் மழையால், வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்து வருகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேற்கூரை காற்றில் பறந்தது
பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்தமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் ஏலமன்னா, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதிகிளல் மின்தடை ஏற்பட்டது. மேலும் பி.எஸ்.என்.எல். சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மேலும் அய்யன்கொல்லியில் சூறாவளி காற்று வீசியதில் முசரா, அப்சல் ஆகியோரது குடிசை வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது. இதனால் 2 குடும்பத்தினரும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story