திண்டுக்கல் மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர் 1,462 பேர் பங்கேற்கவில்லை
திண்டுக்கல் மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினர். 1,462 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
திண்டுக்கல்:
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் இன்றுபிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளாக இன்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 212 பள்ளிகளில் பயிலும் 22 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகள், 245 தனித்தேர்வர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 320 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் 10 ஆயிரத்து 894 மாணவர்கள், 11 ஆயிரத்து 426 மாணவிகள் இடம்பெற்று இருந்தனர்.
இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு மையங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. மேலும் தேர்வு மையத்தின் வளாகத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதோடு செல்போன் எடுத்து வரவும் அனுமதி அளிக்கப்படவில்லை.
20 ஆயிரத்து 858 பேர் எழுதினர்
தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகள் தங்களுடைய ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர். மேலும் தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். பலத்த சோதனைக்கு பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து காலை 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. பின்னர் வினாத்தாளை மாணவர்கள் வாசித்து புரிந்து கொள்ள வசதியாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் இன்று தேர்வு நடைபெற்றதால், ஒருசில மாணவர்களிடம் பதற்றம் காணப்பட்டது. ஆனால் தேர்வு தொடங்கியதும் மாணவர்கள் பதற்றமின்றி இயல்பாக எழுதினர். இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 166 மாணவர்கள், 10 ஆயிரத்து 692 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 858 பேர் தேர்வு எழுதினர். 728 மாணவர்கள், 734 மாணவிகள் என 1,462 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
கலெக்டர் விசாகன் ஆய்வு
இதற்கிடையே தேர்வில் முறைகேடுகளை தடுக்க கல்வி அதிகாரிகளை கொண்ட 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினர். மேலும் 88 தேர்வு மையங்களிலும் 220 பேர் கொண்ட நிலைக்குழு நியமிக்கப்பட்டு தேர்வு முழுமையாக கண்காணிக்கப்பட்டது.
இந்த நிலையில் கலெக்டர் விசாகன் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அந்த தேர்வு மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்று அவர் சோதனை செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
---------------------
பாக்ஸ்
-------------------------
பிளஸ்-2 தமிழ் பாடத்தேர்வு எளிதாக இருந்தது
மாணவ-மாணவிகள் கருத்து
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் பாடத்துக்கு தேர்வு நடைபெற்றது. இதுகுறித்து பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளிடம் கருத்து கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:-
புவனேஸ்வரி:- கொரோனா காலத்துக்கு பின்னர் பொதுத்தேர்வு எழுதுவதால் மிகவும் ஆர்வமும், ஒருவித பதற்றமும் இருந்தது. ஆனால் தமிழ் பாடத்தில் அனைத்து வினாக்களும் எளிதில் விடையளிக்கும் வகையில் இருந்தது. அனைத்து வினாக்களும் பாடத்தில் இருந்தே கேட்கப்பட்டு இருந்தன. இதனால் நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன்.
கீர்த்தனா:- பொதுத்தேர்வுக்கு முன்பு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டதால் படிக்க எளிதாக இருந்தது. மேலும் தேர்வில் அனைத்து வினாக்களும் நான் படித்தவையாக இருந்தன. இதனால் எளிதாக விடை எழுதிவிட்டேன். எனவே எதிர்பார்த்ததை விட நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
அமுதா:-தமிழ் பாடத்தில் புத்தகத்தில் இருக்கும் வினாக்கள் அப்படியே கேட்கப்பட்டு இருந்தன. இதனால் எந்தவித குழப்பமும் இல்லாமல் விடையளிக்க முடிந்தது. அதோடு தேர்வுக்கு நன்றாக படித்து இருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் நன்றாக விடை எழுதி இருக்கிறேன்.
பாடங்களில் இருந்து வினாக்கள்
சரண்யா:- ஒவ்வொரு பாடத்திலும் முக்கியமான வினாக்களில் அதிக கவனம் செலுத்தி படித்தேன். ஒரு மதிப்பெண், சிறு வினாக்களையும் நன்றாக படித்து இருந்தேன். அதேபோல் ஆசிரியர்களும் நன்றாக பயிற்றுவித்தனர். இதனால் பொதுத்தேர்வை மிகவும் எளிதாக எழுத முடிந்தது.
சாம்கிங்:- பாடத்தில் இருந்தே அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன. அதேபோல் திருப்புதல் தேர்வில் வந்த வினாக்களும் அதிக அளவில் பொதுத்தேர்வில் வந்தன. இதனால் மிகவும் எளிதாக விடையளிக்க முடிந்தது.
தீபன்:- கொரோனாவால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 வகுப்புகளில் பொதுத்தேர்வு எழுதவில்லை. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு எதிர்பார்ப்பாக இருந்தது. பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களை நன்றாக படித்து இருந்தேன். அதில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டதால் எளிதாக இருந்தது.
முகமதுஆரிப்:- ஒரு மதிப்பெண் முதல் பெரிய வினாக்கள் வரை அனைத்தும் மிகவும் எளிதாக இருந்தது. இதனால் பயமின்றி தேர்வை எழுத முடிந்தது. நல்ல மதிப்பெண் எடுப்பேன். முதல் தேர்வே எளிதாக இருந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஷாஹினா:-தேர்வுக்கு நன்றாக படித்து இருந்ததால் அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே சற்று கடினமாக இருந்தது. மற்றபடி அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்தேன். கடந்த 1-வது, 2-வது திருப்புதல் தேர்வில் கேட்ட கேள்விகள் பல வந்திருந்ததால் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவேன்.
இவ்வாறு மாணவ-மாணவிகள் கூறினர்.
Related Tags :
Next Story