குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
மேல்மலையனூர் அருகே குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமித்து 83 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, அவர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் கால அவகாசம் வழங்கியது. ஆனால் காலஅவகாசம் வழங்கியும் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வீடுகளை தாங்களே முன்வந்து அகற்றி கொள்ளவில்லை.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அளித்த கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை திண்டிவனம் சப்- கலெக்டர் அமீத் தலைமையிலான அதிகாரிகள் செவலபுரை கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் கிராமமக்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கால அவகாசம்
அப்போது அவர்கள், நாங்கள் உயர் அதிகாரிகளிடம் பேசி கால அவகாசம் வாங்க உள்ளோம். எனவே எங்களுக்கு மதியம் 12 மணி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் மதியம் 12 மணிக்கு மேல் ஆகியும் அவர்களால் கால அவகாசம் வாங்க முடியவில்லை. இதையடுத்து குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் அங்கிருந்து அகற்றினர்.
இதனிடையே சுமார் 10 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள், தங்களது குழந்தைகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. எனவே தேர்வு முடியும் வரை வீடுகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story