சாத்தான்குளத்தில் நெஞ்சுவலியின் போதும் பஸ்சை ஓட்டிவந்து உயிரை விட்ட டிரைவர்
சாத்தான்குளத்தில், பணியின்போது நெஞ்சுவலி ஏற்பட்ட போதும் பயணிகளை நடுவழியில் விடாமல் பஸ் நிலையம் வரை கொண்டு சேர்த்துவிட்டு டிரைவர் உயிரிழந்த சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில், பணியின்போது நெஞ்சுவலி ஏற்பட்ட போதும் பயணிகளை நடுவழியில் விடாமல் பஸ் நிலையம் வரை கொண்டு சேர்த்துவிட்டு டிரைவர் உயிரிழந்த சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பஸ்
நெல்லையில் இருந்து அரசு பஸ் ஒன்று புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நோக்கி வந்தது. பஸ்சை நெல்லை தாமிரபரணி பணிமனையை சேர்ந்த முருகேச பாண்டியன் (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார்.
சாத்தான்குளம் வரும் வழியில் கருங்கடல் பகுதியில் பஸ் வந்தபோது டிரைவர் முருகேசபாண்டியன் சாலை ஓரமாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் கண்டக்டரிடம் தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாக கூறினார். ஆனாலும் பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்ததால் அவர்களின் நலன்கருதி, தனக்கு உடல்நலம் குன்றியபோதும் பஸ்சை முருகேசபாண்டியன் தொடர்ந்து ஓட்டிச்சென்றார்.
சாவு
அந்த பஸ் சாத்தான்குளம் பஸ் நிலையத்திற்குள் வந்தவுடன் அதிலிருந்து இறங்கிய முருகேசபாண்டியன் சற்று தள்ளாடியவாறு நடந்து சென்று நிழலில் நின்று கொண்டிருந்தார். அதனை பார்த்த கண்டக்டர் மற்றும் நேரக்காப்பாளர் ஆகியோர் முருகேசபாண்டியனை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் சென்றார். அங்கு முருகேசபாண்டியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அஞ்சலி
உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் பயணிகளை நடுவழியில் விடாமல் பஸ் நிலையம் வரை கொண்டு சென்று 55 பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு, தன் உயிரை விட்ட டிரைவர் முருகேச பாண்டியன் உடலுக்கு பயணிகள், சக டிரைவர்கள், கண்டக்டர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story