ரூ.2¼ கோடியில் வறட்டாறு குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை தமிழக முதன்மை பொறியாளர் ஆய்வு
ரூ.2¼ கோடியில் வறட்டாறு குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை தமிழக முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
கிணத்துக்கடவு
ரூ.2¼ கோடியில் வறட்டாறு குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை தமிழக முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
வறட்டாறு குறுக்கே தடுப்பணை
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் முதல் நாச்சிபாளையம், சொக்கனூர், முத்துக்கவுண்டனூர், பெரும்பதி வழியாக வறட்டாறு சொல்கிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வரும் மழைநீரை தேக்குவதற்கு போதிய தடுப்பணைகள் இல்லை. இதனால் மழை காலங்களில் வறட்டாறில் வரும் மழைநீர் வீணாக கேரளாவுக்கு சென்று விடுகிறது. ஏற்கனவே கிணத்துக்கடவு மேற்குப் பகுதியில் வாய்க்கால் பாசனமும் இல்லாததால் வறட்சி காலத்தில் அந்த பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வறட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தரவேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
முதன்மை பொறியாளர் ஆய்வு
இதையடுத்து அந்தப் பகுதியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் முத்துகவுண்டனூர்-பாலார்பதி இடையே வறட்டாறு குறுக்கே தடுப்பணை கட்ட திட்டம் வகுக்கப்பட்டது அதன்படி நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 24 லட்சம் செலவில் தடுப்பணை கட்டும் பணி கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கியது. இதில் வறட்டாற்றின் குறுக்கே 50 மீட்டர் அகலத்திலும் 5¾ அடி உயரத்திலும் தடுப்பணை கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
தற்போது தடுப்பணை கட்டும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தநிலையில் தடுப்பணை கட்டும் பணியிணை சென்னையிலிருந்து வந்த தமிழக முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் கோவை மண்டல தலைமை பொறியாளர் முத்துச்சாமி, சென்னை (தரக்கட்டுப்பாடு) தலைமை பொறியாளர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் வந்திருந்தனர்.
குடிநீர் பிரச்சினை இருக்காது
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வறட்டாற்றின் குறுக்கே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தடுப்பணை கட்டும்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தபணி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.பணிகள் வரும் ஜூன் மாதம் 2-ம்தேதிக்குள் முடிவடையும். இந்த தடுப்பணையில்.2 6 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும். மேலும் தடுப்பணைக்குள் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் போர்வெல் அமைத்து கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தடுப்பணையை சுற்றியுள்ள கிராம பகுதியில் குடிதண்ணீர் பிரச்சினை இருக்காது. விவசாய பணிகளும் மேம்படும. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story