போலீஸ் எஸ்.ஐ.தேர்வு முறைகேட்டில் பா.ஜனதா தலைவர்களுக்கு நோட்டீசு வழங்காதது ஏன்?; டி.கே.சிவக்குமார் கேள்வி


போலீஸ் எஸ்.ஐ.தேர்வு முறைகேட்டில் பா.ஜனதா தலைவர்களுக்கு நோட்டீசு வழங்காதது ஏன்?; டி.கே.சிவக்குமார் கேள்வி
x
தினத்தந்தி 5 May 2022 9:04 PM IST (Updated: 5 May 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் பா.ஜனதா தலைவர்களுக்கு நோட்டீசு வழங்காதது ஏன்? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:

  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கசிய விடப்பட்டது

  ராமநகர் பொறுப்பு மந்திரியாக இருக்கும் அஸ்வத் நாராயண், ராமநகரை சுத்தம் செய்வதாக கூறினார். முன்பு ராஜீவ்காந்தி மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. உதவி பேராசிரியர் தேர்வு வினாத்தாள் கசிந்தது. அது யாரால் கசிய விடப்பட்டது. அந்த பதிவாளர் அஸ்வத் நாராயண் வீட்டிற்கு எத்தனை முறை சென்று வந்தார். இதை எல்லாம் பார்க்கும்போது முறைகேடுகளுக்கு அஸ்வத் நாராயணே பிதாமகன் அல்லவா?.

  போலீஸ் துறை நன்றாக பணியாற்றி வருகிறது. பா.ஜனதா அரசுக்கு எதிராக பேசும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீசு அனுப்புகிறார்கள். அதே போல் பா.ஜனதா தலைவர்களுக்கும் நோட்டீசு வழங்க வேண்டும் அல்லவா?. அவர்களுக்கு மட்டும் போலீசார் நோட்டீசு வழங்காதது ஏன்?. எங்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரியங்க் கார்கேவுக்கு நோட்டீசு வழங்கியுள்ளனர். அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அரசு முதலில் தனது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்.

முறைகேடுகள் நடந்துள்ளன

  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா சட்டசபையில் கூறினார். ஆனால் தற்போது அந்த முறைகேடு தொடர்பாக பலரை கைது செய்துள்ளனர். அப்படி என்றால் மந்திரி அரக ஞானேந்திரா பொய் சொல்லவில்லையா?. உயர்கல்வி, பொதுப்பணித்துறைகளில் முதல் நிலை உதவியாளர் பணி நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளன. இது தொடர்பாக யாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எல்லா தகவல்களையும் இந்த அரசு ரகசியமாக வைத்துள்ளது.

  பிரியங்க் கார்கேவை எப்போது விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். மந்திரி அஸ்வத் நாராயண் என்னை ஒருமையில் பேசியுள்ளார். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் அவர் செய்த முறைகேடுகளால் நேர்மையாக படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்ற இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story