அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா
சேவூர்,:
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
தேர்த்திருவிழா
அவினாசியில் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மை பெற்றதாகும். முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார் தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
புனிதநீரால் அபிஷேகம்
முன்னதாக கோவிலில் உள்ள பஞ்சலோகத்தால் ஆன கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டது. யாக சாலை முன் மண்டபத்திலும், கொடிமரத்தின் முன் புறமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடி மரத்துக்கும், பலி பீடத்துக்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது.
கொடித்துணியில் அதிகாரநந்தி, சூரிய, சந்திரன், சிவலிங்கம் ஆகியவை வரையப்பட்டு பூமாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. மேலும் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல்
திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. வருகிற 9-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜப்பெருமாள் கோவில் கொடியேற்றமும் நடைபெறுகிறது. 10-ந் தேதி இரவு கற்பகவிருட்சம் யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 11-ந் தேதி அதிகாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறுகிறது.
தேர்த்திருவிழா
முக்கிய நிகழ்ச்சியாக 12-ந்தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம் வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 13-ந் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம், நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
14-ந்தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜப்பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
16-ந்தேதி இரவு தெப்பத்தேர் உற்சவ நிகழ்ச்சி, 17-ந்தேதி நடராஜப்பெருமான் மகா தரிசனம், 18-ந்தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக்காட்சி நடைபெற்று தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story