ஷவர்மா தயாரிக்கும் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
ஷவர்மா தயாரிக்கும் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர்:
திருப்பூரில் ஷவர்மா உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.
ஷவர்மா உணவங்களில் ஆய்வு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரைப்படி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் அசைவ உணவகங்களில் தயாரிக்கப்படும் ஷவர்மா உணவுப்பொருள் விற்பனை மீது ஆய்வு நடந்தது. திருப்பூர் மாநகராட்சி பகுதிகள், பல்லடம் ரோடு, அவினாசி ரோடு, பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள 50 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 4½ கிலோ கெட்டுப்போன மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பின்னர் உணவக உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள். அதன்படி ஷவர்மா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான கோழி இறைச்சி, முட்டை, எண்ணெய், மாவு அனைத்தும் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும், தரமான பொருட்களாகவும் இருக்க வேண்டும். ஷவர்மா உள்ளே வைக்க பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி சரியான வெப்பநிலையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும். கோழி இறைச்சி நன்றாக சமைக்கப்பட்ட பிறகே உணவுக்கு பயன்படுத்த வேண்டும்.
கடும் நடவடிக்கை
ஷவர்மா தயாரிக்கப்பட்ட பின்பு அதை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும் என்ற தெளிவுரை நுகர்வோர் அறியும் வகையில் தெரிவித்து விற்பனை செய்ய வேண்டும். ஷவர்மாவுக்கு பயன்படுத்தப்படும் மைனஸ் என்ற பொருள் நல்ல நிலையில் இருக்கும் முட்டையில் இருந்து தயாரிக்க வேண்டும். சரியான வெப்பநிலையில் சரியாக சமைக்கப்படாத உணவுப்பொருள் விரைவில் கெட்டுப்போகும். பாக்டீரியா உள்ளே சென்று உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். ஆய்வின்போது இதுபோன்று கண்டறியப்பட்டால் அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவு தரம் குறித்த புகார்களை 94440 42322 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்ணை அனைத்து உணவகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
Related Tags :
Next Story