தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்த கடைகளுக்கு அபராதம்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்த கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 5 May 2022 10:21 PM IST (Updated: 5 May 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

வேங்கிக்கால் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு சோதனை நடந்தது. அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் இருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

வேங்கிக்கால் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு சோதனை நடந்தது. அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் இருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

கடைகளில் சோதனை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து திடீர் சோதனை நடந்தது. 

திருவண்ணாமலை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது அலுவலர்கள் ஒவ்வொரு கடையாக நேரில் சென்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் போன்றவை குறித்து சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்த கடைகளுக்கு அலுவலர்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதித்து வசூலித்தனர். 

இந்தச் சோதனை வேங்கிக்கால் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் புறவெளிச்சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள கடைகளில் நடந்தது. 

துணிப்பைகள் 

இதுகுறித்து உதவி இயக்குனர் லட்சுமிநரசிம்மன் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் குப்பை வாங்கும் தூய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து வழங்க வேண்டும், என்றார்.

ஆய்வின்போது வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன், ஊராட்சி செயலாளர்கள் நாராயணன், காசி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த அலுவலர் ரகுராம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story