வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 16,107 பேர் எழுதினர்


வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 16,107 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 5 May 2022 10:29 PM IST (Updated: 5 May 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 16,107 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். 150 பேர் கொண்ட பறக்கும்படையினர் தேர்வை கண்காணித்தனர்.

காட்பாடி

வேலூர் மாவட்டத்தில் 16,107 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். 150 பேர் கொண்ட பறக்கும்படையினர் தேர்வை கண்காணித்தனர்.

 பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்துள்ளதால் இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு  தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தில் 7,527 மாணவர்கள், 8,580 மாணவிகள், 186 தனித்தேர்வர்கள் என்று மொத்தம் 16,293 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்காக 76 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேர்வையொட்டி மாணவர்கள் அதிகாலையில் எழுந்து பாடங்களை படித்து மனப்பாடம் செய்தனர். பின்னர் குளித்து விட்டு பெற்றோரிடம் ஆசி வாங்கி விட்டு வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பள்ளிக்கு சென்றனர். பெரும்பாலான மாணவர்கள் காலை 8 மணி முதல் பள்ளிக்கு வரத்தொடங்கினார்கள்.

15,558 பேர் தேர்வு எழுதினார்கள்

அவர்கள் பள்ளியில் சகமாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பாடங்களை திரு படித்தனர். பள்ளியில் அவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகள் தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்று கூறி ஆசிரியர்கள் ஆசி வழங்கினர். பல மாணவர்கள் ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி பெற்றதை காண முடிந்தது.

தேர்வு மையத்தில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டது. அதையடுத்து மாணவர்கள் தேர்வு அறைக்கு சென்று தங்களின் இருக்கையில் அமர்ந்தனர். 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாளும், 10.10 மணிக்கு தேர்வுதாளும் வழங்கப்பட்டது. 10.15 மணி முதல் மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கினார்கள். வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள்,

 தனித்தேர்வர்கள் என்று மொத்தம் 15,558 பேர் தேர்வு எழுதினார்கள். 735 பேர் தேர்வு எழுதவில்லை.

7 தண்டனை கைதிகள்

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் 7 கைதிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். இதற்காக மத்திய ஜெயிலில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வளாகத்தில் 7 பேரும் தேர்வு எழுதினார்கள். பெண் கைதிகள் யாரும் தேர்வு எழுதவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் நாளான நேற்று காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  தேர்வு மையத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

150 பேர் கொண்ட பறக்கும் படை

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 7,527 மாணவர்கள், 8,580 மாணவிகள் என்று மொத்தம் 16,107 மாணவ- -மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு அறையில் 20 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 900 பேர் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கவும், ஆள்மாறாட்டத்தை கண்டுபிடிக்கவும் சுமார் 150 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story