பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் பொதுத்தேர்வுக்கு படிக்கும்படி தாய் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்
வேலூரில் பொதுத்தேர்வுக்கு படிக்கும்படி தாய் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்-2 மாணவர்
வேலூர் அரியூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த கோபி மகன் மோனிஷ் (வயது 16). இவர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரது தந்தை கோபி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் தாய் பரிமளா ஷூ கம்பெனியில் வேலை பார்த்து மோனிசை படிக்க வைத்தார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால் மோனிஷ் கடந்த சில நாட்களாக தேர்வுக்கு சரியாக படிக்காமல் அலட்சிய போக்குடன் இருந்துள்ளார். தேர்விற்கான ஹால்டிக்கெட்டை கூட பள்ளிக்கு சென்று வாங்கி வரவில்லை. இதுகுறித்து பரிமளா கேட்டதற்கு தேர்வு தினத்தன்று காலையில் ஹால்டிக்கெட் வாங்கி விட்டு தேர்வு எழுத செல்வதாக மோனிஷ் கூறி உள்ளார்.
பொதுத்தேர்வு எழுத மாட்டேன்
இந்த நிலையில் காலை பரிமளா வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது அவர், மோனிசிடம் பள்ளிக்கு சென்று ஹால்டிக்கெட்டை வாங்கி விட்டு உடனடியாக வீட்டிற்கு வந்து தேர்வுக்கு படிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். அப்போது மோனிஷ், ஹால்டிக்கெட் வாங்க பள்ளிக்கு செல்ல மாட்டேன். பொதுத்தேர்வு எழுத பயமாக உள்ளது. அதனால் தேர்வு எழுத செல்ல மாட்டேன் என்று கூறி உள்ளார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தந்தை இல்லாத நிலையிலும் வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். தேர்வை நன்றாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று மேலும் படித்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். எனவே கட்டாயம் தேர்வு எழுத வேண்டும். அதற்காக பாடங்களை நன்றாக படிக்கும்படி திட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதனால் மோனிஷ் கோபத்துடன் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
தூக்கு போட்டு தற்கொலை
இந்த நிலையில் பரிமளா வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை வெகுநேரம் தட்டியும் மோனிஷ் திறக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மோனிஷ் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.
இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மோனிஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து அரியூர் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு படிக்கும்படி தாய் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
==-===
Related Tags :
Next Story