கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு


கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு
x
தினத்தந்தி 5 May 2022 10:41 PM IST (Updated: 5 May 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

கடலூர், 

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை இல்லாததால், ஒரு நோயாளி சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்துக்கு ‘ஸ்ரெடிச்சரில்’ அடையாள அட்டை பெற சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் நேற்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு திடீரென வருகை தந்து புறநோயாளிகள் பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பதிவு பெற்று சிகிச்சை பெறும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், அந்த பிரிவில் பொதுமக்களுக்கு தேவையான இருக்கை வசதிகளை ஏற்படுத்தி தர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதையடுத்து மருந்தகங்களில் டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் வழங்கப்படுகிறதா? என்று கலெக் டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதா? என்று அங்கிருந்த அலுவ லர்களிடம் கேட்டறிந்தார்.

குறைகளை கேட்டார்

பின்னர் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பொதுப்பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந் தார். ஆஸ்பத்திரியின் சமையல் அறையை பார்வையிட்டு, அதனை தூய்மையாக வைத்திருக்கவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சத்தான, சுகாதாரமான முறையில் உணவுகள் வழங்குவதை சம்பந்தப்பட்ட அலுவலர் கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.

அதன்பிறகு ஆஸ்பத்திரி கழிவறைகளை நோய் பரவாத வண்ணம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுவது குறித்து அட்டவணை குறியீடு பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வின் போது தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story