நவ்நீத் ரானா எம்.பி. சிறையில் இருந்து விடுவிப்பு- ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்
அனுமன் பஜனை தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நவ்நீத் ரானா எம்.பி.க்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர் நேற்று மும்பை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மும்பை,
அனுமன் பஜனை தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நவ்நீத் ரானா எம்.பி.க்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர் நேற்று மும்பை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அனுமன் பஜனை வழக்கு
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டு முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யும், அம்பாசமுத்திரம் அம்பானி பட நடிகையுமான நவ்நீத் ரானாவும், அவரது கணவர் ரவி ரானா எம்.எல்.ஏ.வும் அறிவித்தனர்.
இந்துத்வா பெயரில் வாக்குகளை கவர்ந்த சிவசேனா, அந்த கொள்கையில் இருந்து விலகி செல்வதை உணர்த்தும் வகையில் அனுமன் பஜனை பாடப்போவதாக கூறியதால் மும்பையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துதல் மற்றும் தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜாமீனில் விடுதலை
இந்தநிலையில் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு நவ்நீத் ரானா, ரவி ரானாவும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு நேற்று ரானா தம்பதியருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்தநிலையில் மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட நவ்நீத் ரானா இன்று மதியம் 2 மணிக்கு ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது சிறை முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு திரண்டு இருந்த அவரது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தப்படி காரில் ஏறி புறப்பட்டு சென்றார். சுமார் 2 வாரம் சிறைவாசம் அனுபவித்த அவர் சோர்வாக காணப்பட்டார்.
இதேபோல அவரது கணவர் ரவிரானா எம்.எல்.ஏ. நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் நவிமும்பை தலோஜா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதற்கிடையே நவ்நீத் ரானா தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நவ்நீத் ரானா அதிக ரத்த அழுத்தம், உடல்வலி, முதுகு வலியால் அவதிப்படுவதாக அவரது வக்கீல் தெரிவித்தார்.
சிறையில் இருந்து வெளிவந்த ரவிரானா ஆஸ்பத்திரிக்கு சென்று தனது மனைவி நவ்நீத் ரானாவை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சிறையில் எனது மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி கடந்த 6 நாட்களாக அவர் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சிறை அதிகாரிகள் ஏற்காததால், உடல் நிலை மோசமடைந்து உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு மத்தியில் நவ்நீத் ரானா ஆஸ்பத்திரி படுக்கையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியானது. அதில், நவ்நீத் ரானா தேம்பி அழுகிறார். அவரை கணவர் ரவி ரானா ஆசுவாசப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Related Tags :
Next Story