துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது


துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2022 10:46 PM IST (Updated: 5 May 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் பகுதியில் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் துணை தாசில்தார் உள்பட 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

தேனி: 

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்களை அரசு அதிகாரிகள் துணையுடன் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட தனிநபர்கள் சிலர் அபகரித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் ஆர்.டி.ஓ.க்கள் 2 பேர் உள்பட 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், பெரியகுளம் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், நில அளவையர் பிச்சைமணி, பெரியகுளம் மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் அழகர் ஆகிய 3 பேரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெரியகுளம் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய மோகன்ராம் (வயது 41), நில அளவையர் சக்திவேல் (42) ஆகிய 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று பிடித்தனர். அவர்களோடு சக்திவேல் தனது அலுவலகத்தில் அரசு சாராத உதவியாளராக பணியில் ஈடுபடுத்திய செல்வராஜ் (36) என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் 3 பேரையும் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

 விசாரணையை தொடர்ந்து மோகன்ராம், சக்திவேல், செல்வராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story