பிளஸ் -2 தேர்வை மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்
தர்மபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர். தேர்வு மையங்களில் கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி:-
தர்மபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர். தேர்வு மையங்களில் கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பிளஸ் -2 தேர்வு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது. 176 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 570 மாணவர்களும், 10 ஆயிரத்து 457 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 27 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 79 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முதற்கட்டமாக நேற்று தமிழ் பாடத்திற்கான தேர்வு நடந்தது. இதில் 19 ஆயிரத்து 852 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
பறக்கும் படை
தேர்வையொட்டி 79 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களும், 4 கூடுதல் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களும், 79 துறை அலுவலர்களும், 4 கூடுதல் துறை அலுவலர்களும், 1,280 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் 22 வழித்தட அலுவலர்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உதவியாக 120 சொல்வதை எழுதுபவர்களும், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். தனித்தேர்வர்களுக்காக தர்மபுரி சோகத்தூர் ஆக்சிலியம் மெட்ரிகுலேஷன் பள்ளி, அரூர் ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 தனித்தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 128 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
பிளஸ் -2 பொதுத் தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லையில் அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதேபோன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகவேல் (தர்மபுரி), பாலசுப்ரமணியம் (பாலக்கோடு), ரவி (அரூர்) மற்றும் கல்வித்துறை அதிகாரிகளும் பிளஸ் -2 பொதுத் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story