இறைச்சி கடைக்காரரிடம் ரூ.1½ லட்சம் மோசடி


இறைச்சி கடைக்காரரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 May 2022 10:55 PM IST (Updated: 5 May 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

முதலீடு செய்தால் கூடுதல் தொகை வழங்குவதாக கூறி சிக்கன் கடை உரிமையாளரிடம் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.

தர்மபுரி:-
முதலீடு செய்தால் கூடுதல் தொகை வழங்குவதாக கூறி சிக்கன் கடை உரிமையாளரிடம் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.
பணம் முதலீடு
தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் சவுக்கு தோப்பு பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரை, செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறியுள்ளார். ரூ.200 முதலீடு செய்தால் கூடுதலாக ரூ.380 பெற முடியும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பி பல மாதங்களாக கார்த்திக் தனது வங்கி கணக்கு மூலம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 847 முதலீடு செய்தார். அதற்குரிய மொத்த தொகை ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் என்று கூறப்பட்டது. இந்த தொகையை எடுக்க முடிவு செய்த கார்த்திக் அதற்கு முயன்றபோது பணத்தை எடுக்க முடியவில்லை.
மோசடி
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மேலும் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் மட்டுமே முதலீட்டு தொகையை கூடுதல் தொகையுடன் பெறமுடியும் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக விசாரித்தபோது பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் இதுபற்றி தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறைச்சி கடை உரிமையாளரிடம் பகுதி நேர வேலை வழங்குவதாக பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story