ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 13,420 மாணவ-மாணவிகள் எழுதினர்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 13,420 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 5 May 2022 11:20 PM IST (Updated: 5 May 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13,420 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேர்வு மையங்களை ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13,420 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேர்வு மையங்களை ஆய்வு செய்தார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6,639 மாணவர்கள், 7,216 மாணவிகள் என 13,855 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். முதல் நாளான நேற்று 13,472 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.  383 பேர் தேர்வு எழுதவில்லை. 

60 மையங்களில் தேர்வு நடைபெற்றது. ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

 அப்போது அவர் கூறியதாவது :-

பறக்கும்படை

தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பொது தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததால் மாநிலம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் தொடங்கியது. 

அரசு பொதுத் தேர்வுகளை முன்னிட்டு 86 நிலையான படை உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இதுதவிர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலர் தலைமையில் தேர்வு கண்காணிப்பு குழுவினர் அரசு பொது தேர்வுகளை கண்காணிப்பார்கள். 

தைரியமாக எழுத வேண்டும்

தேர்வுக்கான வினாத்தாள்கள் மையத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் உதவியுடன் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மாணவர்கள் தேர்வு அறைக்குள் தண்ணீர் பாட்டில், பேனா, ஹால் டிக்கெட் கொண்டு செல்லலாம். எலக்ட்ரானிக் கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் பதற்றமடையாமல் தைரியமாக தேர்வு எழுத வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உடனிருந்தார்.

Next Story