காளியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு


காளியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 5 May 2022 11:21 PM IST (Updated: 5 May 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

கோடாலிகருப்பூர் காளியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தா.பழூர்
பிரசித்தி பெற்ற கோவில் 
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள காளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் பங்குனி, சித்திரை மாதங்களில் காளியம்மன் திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே கோவிலில் இருந்த விக்ரகம் மற்றும் உண்டியல் ஆகியவை பாலாலயம் செய்யப்பட்டு அருகில் தகர கொட்டகை அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கோவில் அர்ச்சகர் உலகநாதன் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு சுமார் 12 மணி அளவில் மர்ம நபர்கள் பாலாலயம் செய்யப்பட்டுள்ள தகர கொட்டகையின் பக்கவாட்டு தகர சுவர்களை கத்தரித்து அதன் வழியாக உள்ளே சென்றுள்ளனர். 
திருட்டு 
அங்கு திருநடன திருவிழாவிற்கு காளி வேடம் அணிபவர் தலையில் சுமந்து ஆடும் காளியம்மன் சிரசு தனி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த சிரசின் மூக்கில் சுமார் ஒரு பவுன் மதிப்புள்ள மூக்குத்தி திருடப்பட்டது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை அங்கிருந்து எடுத்துச்சென்று புதிதாக கட்டப்படும் கோவிலின் பின்புறம் மறைவான பகுதியில் வைத்து உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் உண்டியலை அங்கேயே வீசி சென்றனர். 
உண்டயலுக்குள் சுமார் ரூ.4 ஆயிரம் இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராம கோவில்களில் தொடர் உண்டியல் திருட்டு சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Next Story