குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 May 2022 11:30 PM IST (Updated: 5 May 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை, 
குடிநீர் வினியோகம் நிறுத்தம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தமல்லிமேடு பகுதியில் சுமார் 50 வீடுகள் உள்ளது. இந்த கிராமமானது தொண்டமாங்கினம், கொசூர் ஆகிய 2 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமம். இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு தொண்டமாங்கினம் ஊராட்சியில் இருந்து போர்வெல் மூலம் காவேரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து சில காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. 
இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். இதையடுத்து கொசூர் ஊராட்சியிலிருந்து கொத்தமல்லிமேடு பொதுமக்களுக்கு கிணறுகள் மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது அங்கும் போர்வெல் மோட்டார் பழுதானதால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாமல் கொத்தமல்லிமேடு பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். 
சாலை மறியல்
இதையடுத்து 2 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் கொத்தமல்லிமேடு கிராம பொதுமக்கள் ஒன்றிய ஆணையரிடம் புகார் கொடுத்தும் இதுவரை 2 ஊராட்சிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொத்தமல்லிமேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு  காலிக்குடங்களுடன் வந்து தோகைமலை- பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார், கொசூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிராஜலிங்கம், தொண்டமாங்கினம் ஊராட்சி மன்ற தலைவர் கலைஞர் என்கிற மகாமுனி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒருவாரத்திற்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் தோகைமலை-பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story