நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்-2 தேர்வு தொடக்கம்: தமிழ் தேர்வை 19,134 மாணவ, மாணவிகள் எழுதினர் 682 பேர் தேர்வுக்கு வரவில்லை


நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்-2 தேர்வு தொடக்கம்: தமிழ் தேர்வை 19,134 மாணவ, மாணவிகள் எழுதினர் 682 பேர் தேர்வுக்கு வரவில்லை
x
தினத்தந்தி 5 May 2022 6:11 PM GMT (Updated: 5 May 2022 6:11 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்-2 தேர்வு தொடக்கம்: தமிழ் தேர்வை 19,134 மாணவ, மாணவிகள் எழுதினர் 682 பேர் தேர்வுக்கு வரவில்லை

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. இதில் தமிழ் பாடத்தேர்வை 19 ஆயிரத்து 134 மாணவ, மாணவிகள் எழுதினர். 682 பேர் தேர்வுக்கு வரவில்லை.
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளில் இருந்து 9 ஆயிரத்து 729 மாணவர்கள், 10 ஆயிரத்து 138 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
மேலும் தனி தேர்வர்கள் 472 பேரையும் சேர்த்து மொத்தமாக 20 ஆயிரத்து 339 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 82 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
682 பேர் எழுதவில்லை
முதல் நாளான நேற்று தமிழ் பாடத்தேர்வை எழுத 19 ஆயிரத்து 739 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 19 ஆயிரத்து 73 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 666 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தனி தேர்வர்களை பொறுத்த வரையில் தமிழ் தேர்விற்கு 77 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 61 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 16 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மொத்தமாக தமிழ் தேர்வை 19 ஆயிரத்து 134 பேர் எழுதினர். இதேபோல் 666 மாணவ, மாணவிகள், 16 தனித்தேர்வர்கள் என 682 பேர் எழுதவில்லை. இந்தி, பிரெஞ்சு போன்ற தேர்வுகளை 18 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவரும் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலெக்டர் ஆய்வு
86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 1,207 அறை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 120 பேர் கொண்ட பறக்கும் படை, வழித்தட அலுவலர்கள் என 1,400-க்கும் மேற்பட்டோர் பிளஸ்-2 தேர்வு பணியில் ஈடுபட்டனர்.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி உடன் இருந்தார். இதேபோல் தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேர்வை முன்னிட்டு அனைத்து மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பிளஸ்-2 தேர்வு தொடங்கியதையொட்டி நேற்று காலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், பலப்பட்டரை மாரியம்மன் கோவில் என அனைத்து கோவில்களிலும் மாணவ, மாணவிகள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ததை காண முடிந்தது. மேலும் அனைத்து மையங்களிலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

Next Story